இலங்கை கைது செய்யப்பட்ட இளைஞர் பலி - பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
17 Nov,2021
இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய - பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச வாசிகள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு குறி்த்து முறைப்பாடு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர், பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் என்றும் இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்ததையடுத்து, பனாமுரே பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பிரதேச வாசிகள், பொலிஸாரானால் தாக்கப்பட்ட குறித்த நபர் கொலைசெய்யப்பட்டதாகக் கூறி, பொலிஸாருக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு கலகம் விளைவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்கு தல் நடத்தியதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொலன்ன - எம்பிலிப் பிட்டிய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
எம்பிலிப்பிட்டி - பனாமுரே பொலிஸ் நிலையத்தின் இரு அதிகாரிகள் பணியி லிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தி லும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் பொலிஸாரால் தாக்கிக் கொலை செய்யப் பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினர்.
இந்தச் செயற்பாட்டைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் பாராளுமன்றில் எழுந்து நின்று எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
குறித்த குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் குறித்த இளைஞர் நேற்றிரவு 10 மணியளவிலே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தனது மேற்சட்டையைப் பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் அவரை மீட்டபோதும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.