கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறும் மைத்திரி
15 Nov,2021
சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர் எனவும் அப்படி தனித்து போட்டியிடுவது என்றால், அந்த தீர்மானம் குறித்து தொகுதி அமைப்பாளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தனிக்கட்சியாக தனித்து போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் அனுராதபுரம் மாவட்ட கிளையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தகுதிகளை ஆராய்ந்த பின்னரே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாவட்ட பிக்கு முன்னணி, இளைஞர் முன்னணி, விவசாய அமைப்பு, ஆசிரியர் முன்னணி, பெண்கள் முன்னணி ஆகியவற்றிக்கான நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் அனுராதபுரம் விமான நிலைய வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது சுதந்திரக் கட்சியின் அனுரதபுரம் மாவட்ட இளைஞர் முன்னணியின் செயலாளர் சமன் குமார, எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததுடன் அந்த யோசனையை கட்சியின் துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆமோதித்து, நிறைவேற்றியுள்ளனர்.
இது தொடர்பில் அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க,
கடந்த அரச தலைவருக்கான தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில், சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய போதிலும் எதிர்பார்த்தப்படியான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.