சீரற்ற காலநிலையால் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிப்பு
14 Nov,2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள, 150 பிரதேச செயலகப் பிரிவுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் உள்ள 65 ஆயிரத்து 704 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில், புத்தளம் மாவட்டத்தில் 7 பேரும் கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் தலா 6 பேரும் பதுளை மாவட்டத்தில் நால்வரும் மாத்தளை, காலி, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம், 49 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 574 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.