ஹிட்லராக மாறிக்கொண்டிருக்கும் கோட்டாபய!
11 Nov,2021
இலங்கையின் தற்போதைய நிலவரங்களை ஒத்த சம்பவங்களே ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது ஜேர்மனியிலும் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி உபதலைவர் ரெஹான் ஜயவிக்ரம (Rehan Jayawickrama) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ரெஹான் ஜயவிக்ரம, அடோல்ப் ஹிட்லருக்கும் (Adolf Hitler) இலங்கையின் ஆட்சியாளருக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாக கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“விவசாயிகளின் கழுத்தைப்பிடித்து சேதனப்பசளையைப் பயன்படுத்துமாறு தன்னால் கூறமுடியும் என்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)அண்மையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட படி, இது உண்மையில் விவசாயிகளின் கழுத்தைப்பிடிப்பதுடன் தொடர்புடைய கருத்தல்ல. மாறாக அது எமது நாட்டின் ஜனநாயகத்தின் கழுத்தைப்பிடித்து நெரிக்கும் வகையிலான கருத்தாகும்.
உண்மையைக் கூறுவதானால் தற்போது எமது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை ஒத்த சம்பவங்களே ஹிட்லர் ஜேர்மனியை ஆட்சிசெய்தபோது, அங்கு நடைபெற்றன.
ஹிட்லரும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறியே மக்களின் வாக்குகளைப்பெற்று ஆட்சிப்பீடமேறினார். ஆனால் ஆட்சியதிகாரத்தைப் பெற்றதன் பின்னர் சிலமாதங்களுக்குள்ளாகவே மிக மோசான பாசிசவாதியாக மாறி நாடாளுமன்றத்தைக் கூடத் தீயிட்டுக்கொளுத்தினார்.
எனவே இப்போது நோக்குகையில் ஹிட்லருக்கும் எமது நாட்டின் ஆட்சியாளருக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவிலான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஹிட்லரும் அவரது நாட்டிலுள்ள மக்கள் மத்தியில் இனவாதத்தைப் பரப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். அச்செயற்பாடு தற்போதைய ஆட்சியாளர்களினால் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
தீவிரவாதத்தை விடவும் இனவாதம் மிகமோசமானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைப்பலத்தின் மூலம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியும். ஆனால் ஒருவரின் புத்தியில் விதைக்கப்படும் இனவாதம் என்பது எப்போதும் நிலைத்திருக்கும்.
ஆகவே தற்போதைய அரசாங்கத்தினால் கூறப்படும் பொய்களை நம்பி இனியும் ஏமாறவேண்டாம் என்று 69 இலட்சம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் எம்முடன் ஒன்றிணையவேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலத்தில் நாம் வாழ்வதற்கு இந்த நாடு எஞ்சியிருக்காது” என்றார்.