இராஜாங்க அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிப்பு!
07 Nov,2021
இலங்கையின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான காலப்பகுதிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சரின் முதல் வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 26 நாட்களுக்கு தொடரும், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சட்டமூலத்தின் மீதான குழுநிலை விவாதம் டிசம்பர் 10ஆம் திகதி வரை தொடரும்.