நாளை புதிய பதவியினை ஏற்கும் மற்றுமொரு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்!
27 Oct,2021
தேசிய மிருக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ச (Shermila Rajapaksha) நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை 28ஆம் திகதி தொடக்கம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக இருந்த இஷினி விக்கிரமசிங்கவுக்கு (Ishini Wickremasinghe) பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷர்மிலா ராஜபக்சவின் (Shermila Rajapaksha) நியமனம் கடந்த 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் 19 மற்றும் 20ஆம் திகதிகள் பொது விடுமுறை என்பதால் 21ஆம் திகதி அமைச்சரவை அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நாளைய தினம் பதவியினை ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காவின் காவலில் இருந்த 14 யானைகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் பதிவு செய்வதற்காக விடுவித்த உத்தரவால் இஷினி விக்கிரமசிங்க (Ishini Wickremasinghe) அதிருப்தி அடைந்து அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கணக்காளரான இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளமை கூட்டிக்காட்டத்தக்கது.