கோட்டாபய தனது கொள்கையிலிருந்து மாறாவிட்டால்.... அரசாங்கத்திற்கு கடுமையான
27 Oct,2021
ரஷ்யாவின் ஏற்பட்ட பஞ்சத்தில் மில்லியன் கணக்கான மக்கள் உணவின்றி மரணித்தனர். அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டுசெல்லாமல், துறைசார் நிபுணர்களின் அறிவுறைகளை பின்பற்றி செயற்பட அரசாங்கம் முன்வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச சேதன பசளை தொடர்பான தனது கடுமையான கொள்கையில் இருந்து விரைவில் மாறாவிட்டால் எமது நாடு பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எமது நாட்டிலும் இன்று நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் நீக்கப்படுவதை நாம் காண்கிறோம். இது முற்றிலும் தவறு. பேராதனை பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் புத்தி மரம்பேவையும் வெளியேற்றியிருக்கிறார்கள்.
உலக நாடுகளிலும் இவ்வாறான புத்திஜீவிகள் அரசியல் தீர்மானங்களுக்கு எதிராக செயற்ப்பட்டமையால் பதவி விலக்கி பின்னர் ராஜ துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். இறுதியில் இதனால் கிடைத்தது ஈடு செய்ய முடியாத விபரீதங்களாகும்.
2019 ஆம் ஆண்டில் 70,350 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய செய்கைகள் செய்யப்படுவதாகவும் இது மொத்த விவசாய நிலத்தில் 2.5 சதவீதம் மட்டுமே என்றும் தேசிய விஞ்ஞான மன்றம் கூறுகிறது, அதில் 2338 பேர் மட்டுமே இயற்கை விவசாயிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் குறிப்பாக ஏற்றுமதி விவசாயத்தில் ஈடுபவர்கள்.
இதனால் நெற்பயிர் விளைச்சலில் முப்பத்தைந்து சதவீதம் குறைவடையும் என்றும்,தேயிலைத் தோட்டங்கள் 50வீதத்தாலும், ஐம்பது சதவீத சோளச் செய்கைகளிலும்,மலர்ச் செய்கைகளில் 100வீதமும் அறுவடைகள் குறைவடையும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரமும் பாதிக்கப்படும். விவசாய ரீதியான வருமானம் குறையும், கிராமப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, கிராமப்புற வறுமை அதிகரிக்கும்,கிராமிய வறுமை அதிகரிக்கும் போது, கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் வேலைவாய்ப்பை தேடி வருவதால் நகர்புற பிரச்சினைகள் அதிகரிக்கும்.அதே சமயம் ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடையும்.
எனவே, அரசாங்கம் பின்பற்றுகின்ற விவசாய உரம் தொடர்பான கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்களை உணவின்றி மரணிக்கச்செய்யும் நிலைக்கு அரசாங்கம் ஆழ்த்தும் என்றார்.