விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி பருப்பு, விலைவாசிகளைப் பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்பு காட்டியுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கூற்று பற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி உரையாற்றியபோது, மீன் டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பேன். அவற்றை கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன், என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார்.
இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருட்களை தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.
சீனிக்கு ரூ. 49-75 என்ற மிகப்பெரிய வரி குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது.
இந்த பெரும் தொகை, பாமர மக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். அதாவது சீனி அரசாங்கம் சொல்லும் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம்.
கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை.
இதற்கிடையில் ஜனாதிபதி அரிசி, உணவு தானிய மொத்த வியாபார புறக்கோட்டை கடைவீதிக்கும் போய் அங்கே கடைகளில் சற்று நேரம் கணக்கு பிள்ளை வேலையும் பார்த்தார்.
பொருட்களை தேடி கண்டு பிடிக்கிறேன் என தனது இராணுவ அதிகாரி ஒருவரையும் நியமித்தார். அவரும் ஆலைகளை பிடிப்பேன், களஞ்சிய சாலைகளை உடைப்பேன், திறப்பேன் என்றார். ஒன்றும் பிரயோஜனம் இல்லை.
கடைசியில், அரிசி விலைகள் தொடர்பில், ஜனாதிபதியின் வர்த்தமானிகளை தூக்கி கடாசி விட்டு பாரிய ஆலை அதிபர்கள்தான் விலைகளை தீர்மானித்து அறிவித்தார்கள். இப்போது அந்த இராணுவ அதிகாரியும் காணாமல் போய் விட்டார்.
சந்தை பொருளாதார நாட்டில், பொருட்களின் விலைகளை, “தேவை-விநியோகம்” (Demand & Supply) ஆகியவைதான் தீர்மானிக்க முடியும். இரண்டும் சமபலத்தில் இருக்க வேண்டும். தேவை கூடி, விநியோகம் குறைந்தால் விலை கூடும். தேவை குறைந்து, விநியோகம் கூடினால் விலை குறையும்.
இந்த பொருளாதார அறிவு என்னிடம் உண்டு. எங்களிடம் உண்டு. இவர்களிடம் இல்லை. ஆகவே, இந்த இராணுவ அதிகாரிகள் தடாலடியாக விலைகளை தீர்மானிக்க முடியாது.
அரசாங்கம், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அவதானித்து, வரி குறைப்பு, வரி விதிப்பு என்ற நிர்வாகத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
இராணுவ, சுங்க, வரி அரசாங்க அதிகாரிகளை கொண்டு வர்த்தக சமூகத்தை மிரட்டி காரியமாற்ற முடியாது. மிரட்டினால், “போதுமடா சாமி” அல்லது “போதுமடா ஆமி” என்று கூறிவிட்டு வர்த்தக சமூகம் கடைகளை மூடி விட்டு வீடுகளில் இருப்பார்கள்.
“வேறு வழியில்லை. சும்மா முரண்பட வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள்”, என என் நண்பர்களுக்கு நான் சொன்னேன்.
இந்த ராஜபக்ஷ அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்து கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது.
தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக்குடைந்து போய் இருக்கின்றனர். இன்று, வாழ்க்கை செலவு விலைவாசி விஷயம் கைமீறி போனவுடன் ஜனாதிபதி விலைவாசியை தீர்மானிக்க நான் இந்த பதவிக்கு வரவில்லை என மாற்றி போடுகிறார் என்றார்.