இந்தியாவிடமிருந்து 500 மில்லியன டொலர்களை கடனாக பெறும் இலங்கை
17 Oct,2021
நாட்டில் ஏற்பட கூடிய எரிப்பொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
இதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய தரப்பு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதார மூலங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு தேசிய வருவாய் மற்றும் அந்நிய செலாவணி இருப்பு என்பன வீழ்ச்சிக்கண்டன.
இதனால் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு மற்றும் ரூபாவின் வீழ்ச்சி என்பன நேரடியாகவே இலங்கையின் இறக்குமதியை பாதித்தது.
இந்நிலையில், இலங்கையின் எரிப்பொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான மசகு எண்ணெய் கொள்வனவும் கேள்விக்குறியானது. இதற்கு பிரதான காரணம் நாட்டில் போதியளவு டொலர் இன்மையாகும்.
இவ்வாறானதொரு நிலையில் ஓமான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எரிப்பொருள் கொள்வனவு செய்யும் நோக்கில் எரிச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அந்நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் போது இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கு ஓமான் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டது.
ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலுமே ஒப்பந்தம் அமையும் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இன்று வரையில் கலந்துரையாட மட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுப்புறம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடனும் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை பெறுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இந்தியாவுடனான கலந்துரையாடல்களில் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.