இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள உலகின் முன்னணி நிறுவனம்
07 Oct,2021
ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கு வர்த்தக விமானங்களை நவம்பர் 05 ஆம் திகதி முதல் தொடங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, நவம்பர் 05 ஆம் திகதி முதல் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானசேவைகளை நடத்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்தார்.
பிரான்சின் பாரிசில் தற்போது நடைபெறும் சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொள்ளும் ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
திட்டமிடப்பட்ட விமான சேவையை விரைவுபடுத்துவது மற்றும் ஏர் பிரான்ஸ் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு சிறப்பு நிவாரணப் பொதியை செயல்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சிறப்பு நிவாரண தொகுப்பு நாட்டில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் நாட்டில் விமானசேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏர் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
ஏர் பிரான்ஸ் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும் .1933 ல் நிறுவப்பட்ட இந்த விமான நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஸ்கை ட்ராக்ஸ் உலக விமான போக்குவரத்து விருதை வென்றுள்ளது.