சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வருகின்றது.
இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.
இதனால், இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை
சீனாவிடமிருந்து அரசாங்கம் அவசரமாக இந்த கடனை பெற்றுக்கொண்டமை குறித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது.
நாடொன்றிற்கு குறைந்தது மூன்று மாத காலத்திற்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு இருக்க வேண்டும் எனவும், ஆனால் இலங்கை வசம் தற்போது அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. இதனால், கடனொன்றை பெற்றுக்கொள்ளும் போது, அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும் என கூறிய அவர், அதனூடாக ரூபாயின்பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் குறைவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், பெருமளவிலான கடன் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றமையினால், கீழ் மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கோவிட் பரவல் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்தவொரு தரப்பும் உதவிகளை செய்ய முன்வராத காரணத்தினால், இவ்வாறான கடன்களின் ஊடாக பங்களிப்புக்களை செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
'குறைந்த காலம்; அதிக வட்டி'
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறு குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.
சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது என கூறிய அவர், நாடொன்றிடமிருந்து கடன் வாங்கும் போது பிரச்னை காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும்; சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குவதாகவும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.
அதனால், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் என பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.
பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசு என்ன கூறுகிறது?குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டிருந்தன.இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு அதிவேக வீதி, கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகர் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகவே சீனாவிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது. குறிப்பாக சீனாவிடமிருந்து 10 பில்லியன் யுவானை (சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன பணம்) பெற்றுக்கொண்டுள்ளதாக மே மாத இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே தாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வருடாந்தம் சுமார் 8 பில்லியன் ரூபா வரை இடைவெளியொன்று காணப்படுகின்றமையினால், இந்த காலப் பகுதியில் அதனை ஈடு செய்துக்கொள்வதற்காக இறக்குமதி இயலுமான வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.சுற்றுலா துறை, வெளிநாடு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே அதனை இதுவரை காலமும் ஈடு செய்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த மூன்று விதமான வருமானங்களும், கொவிட் நிலைமைக்கு மத்தியில் இன்று பூஜ்ஜியமாகியுள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இயலுமான வரை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் ஈடு செய்துக்கொள்ள முடியாதமையினாலேயே கடன் பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.