கொழும்பு வர்த்தக நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
20 Aug,2021
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கையாக கொழும்பு நகரத்தின் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூடுமாறு, கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (19) அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில், “கொரோனாவைக் கட்டுப்படுத்த கொழும்பு நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் சில நாள்களுக்கு மூடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம், கொழும்பு நகரத்தின் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எமக்கு ஆதரவு வழங்குங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு நகரத்திலேயே டெல்டா திரிபுகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனேக வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து, வர்த்தக நிலையங்களை மூட முன்வந்துள்ளமையையும் அவர் வரவேற்றுள்ளார்.
“வர்த்தக இலாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்புப் பாராட்டத்தக்கது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை ” என்று மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022 ஜனவரிக்குள் 30,000 பேர் கொரோனா தொற்றால் மரணித்து விடுவர் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மேயர் ரோஸி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்