” – ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையை இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (21) மாலை கையளித்திருந்தனர்.
மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையானக குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் மற்றும் குழுக்களினால் வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையிலேயே, இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு இடைகால அறிக்கையில் ஊடாக பரிந்துரை செய்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ம் சரத்துக்கள் குறித்து, இந்த ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் அமல்படுத்துவது தொடர்பிலான மூன்று முன்மொழிவுகளை, இந்த ஆணைக்குழு தமது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்வைத்துள்ளது.
இந்த சட்டத்தின் 9வது சரத்தின் ஊடாக தடுத்து வைத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்குகளை விசாரணை செய்து நிறைவு செய்வது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சட்டத்தின் 11வது சரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
13வது சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்த பட்சம் மூன்று உறுப்பினர்களை கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ஆலோசனை சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, குறித்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைந்துக்கொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர் நிறுவனங்களோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை ஜனநாயக மற்றும் சட்ட செயல்முறைக்குள் தீர்ப்பதற்கு தேவையான நிறுவன திருத்தங்களை மேற்கொண்டு, நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.