ஜனாதிபதியின் ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ திட்டம் வடக்கில் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
15 Jul,2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவான சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’- தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்களுக்கான தென்னை மரக்கன்றுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பிரதேச பொறுப்பாளர்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நாடுதழுவிய தேசிய நிகழ்சித் திட்டம் கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்குமான ஒதுக்கீடு பெருந்தோட்டத்துறை அமைச்சு, தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் ஊக்குவிப்பு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, யாழ் மாவட்டத்தில் குறித்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் ஊடாக முன்னெடுத்துள்ளார்.
இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் தோறும் முதற்கட்டமாக குறித்த தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை சமூர்த்தி பயனாளிகளுக்கும், இரண்டு மில்லியன் தென்னங் கன்றுகளை நிவாரண அடிப்படையிலும், மேலும் ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை விரும்பியவர்கள் கொள்வனவு செய்து நடுவதற்கும் ஏற்ற வகையில் – அடுத்த வருடத்துக்குள் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.