லண்டனிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம்; நடுவானில் நடந்த பரபரப்பு!
10 Jul,2021
லண்டனிலிருந்து ஸ்ரீலங்கா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து எரிபொருள் தீர்ந்ததினால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்களை ஸ்ரீலங்கா விமானசேவைகள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
அவ்வாறான எந்த சம்பவமும் நிகழவில்லை என்று ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது. லண்டன் – ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த 06ஆம் திகதி ஸ்ரீலங்கா திரும்பிய UL-504 இலக்கமுடைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் அவசரமாக இந்தியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடுவானில் வைத்து எரிபொருள் தீர்ந்ததினால் இந்தியாவின் திரிவேந்திரபுரம் விமான நிலையத்திற்குத் தரையிறக்கம் செய்யப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னர், ஓமானின் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம், சுமார் 03 மணித்தியாலங்கள்வரை அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும் விமானம் பயணத்தை ஆரம்பித்து 03 மணிநேரங்களிற்குள் இப்படியான அசௌகரியம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்தியாவிலிருந்து 40 நிமிடங்களிற்குள் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் ஸ்ரீலங்கா நோக்கிப் புறப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேவேளை, குவைட் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
இவ்வாறு வெளியாகியிருக்கும் தகவல்கள் பற்றி ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் இன்றைய தினம் பதிலளித்துள்ளது. குவைட் சர்வதேச விமான நிலையத்தில் இந்த UL-504 ரக ஸ்ரீலங்கன் விமானம் தரையிறக்கம் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம், எரிபொருள் தீர்ந்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும், மாறாக தொழில்நுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளவே இந்தியாவில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.