பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- பிரதமர்
18 May,2021
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலைமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலின் காரணமாக அப்பிராந்தியங்களிலுள்ள மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளமை மிகவும் கவலையளிக்கிறது.
குறித்த மோதல் நிலைமை, அண்மையிலுள்ள பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகின்றது. இது முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும். பாலஸ்தீன மக்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்.
மேலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காண்பதற்கு, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான பாதுகாப்பு தேவைகள் மற்றும் நியாயத்தன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது அவசியமாகும்.
இதேவேளை நிம்மதியாக வாழ்வதற்கு பாதுகாப்பான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளலை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களினால் பேச்சுவார்த்தைகள் ஊடாக நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.