மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத் தடை!
11 May,2021
மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.
முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.
சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாண எல்லையை கடப்பதற்கு குறுக்கு வழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள். வழங்கும் தகவல்கள் திருப்தியில்லையெனில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள். மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படாது.