இலங்கையில் கொவிட் தடுப்பூசிகளை தயாரிக்க தயார்- சீனா அறிவிப்பு
09 May,2021
இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான திட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு 10/12 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து டுவிட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தூதரகம், தடுப்பூசியை போதுமான அளவு வழங்குவது தொடர்பில் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பயோடெக் நிறுவனங்களை ஊக்குவிக்க இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சீனாவின் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசிகளை அவசரமாக பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றையதினம் அனுமதி அளித்தது.
இலங்கையிலும் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்.எம்.ஆர்.ஏ) நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து சீன சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசிகள் இன்று பாணந்துறை சுகாதார வைத்திய அலுவலகத்தில் இருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.