உயிரிழந்தவருக்கு கொரோனா - இறுதிச் சடங்கிற்கு சென்ற 30 குடும்பங்கள் தனிமையில்!
07 May,2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத் தவறினால், 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
யாழ். சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளை நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் வீட்டாரிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இறந்தவருக்குக் கொரோனா என்பதால் மரண வீட்டுக்குச் சென்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தவறின் காரணமாக சடலத்தை ஏற்றி இறக்கியவர், கையாண்டவர்கள், மரண வீட்டுக்குப் போனவர்கள் என 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும்அவலம் ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் பவானந்தராஜா வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, உயிரிழந்த நபர், கடந்த 4ஆம் திகதி காலை 8.45 மணிக்கு வைத்தியசாலையில் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டார். அந்தப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுநாள் 5ஆம் திகதி பகல் அவர் உயிரிழந்து விட்டார். மரணத்தின் பின்பும் மாதிரி பெறப்பட்ட போதும் முதல் நாள் சோதனை செய்த அடிப்படையில் சடலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்வாறு சர்ச்சைக்குள்ளான சடலம் நேற்றுக் காலை மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டடு பின்னர், தகனம் செய்யப்பட்டுள்ளது.