தேர்தலை வையுங்கள்! மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் - அரசாங்கத்திற்கு தேரர்
13 Apr,2021
சவால் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாட்டை நன்கு அறிந்துக் கொள்ள முடியும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. அரச நிறுவனங்களின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தாவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் இல்லாமலிருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் எழுச்சிப் பெற்றிருக்காது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எழுச்சிக்கு அபயராம விகாரை பல வழிமுறைகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அபயராம விகாரை இருக்கிறதா, இல்லையா என்பதை கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் மறந்து விட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மாத்திரம் காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றமடையாமல் உள்ளார்.
தற்போதைய அரசியல்வாதிகள் இவரிடமிருந்து பல நல்ல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. அரச திணைக்களங்கள், மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மோசடியாளர்களாக உள்ளார்கள்.
ஒரு சிலருக்கு அரச நிர்வாகம் குறித்து எவ்வித முன்னனுபவங்களும் கிடையாது. இவ்வாறான நிலையில் அரச செயலொழுங்கினை வினைத்திறனாக முன்னெடுக்க முடியாது. தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு பொறுத்தமற்றது. ஆகையால் மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்து, உள்ளுராட்சி மன்றங்களை பலப்படுத்துமாறு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச நாடுகளும் அழுத்தம் பிரயோக்கின்றன. அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாகாண சபை தேர்தலை நடத்தினால் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும்.
அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் கொள்கைக்கு முரணாக காணப்படுகிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.