முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
06 Apr,2021
யுத்தத்தின் பின் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இனி எங்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் போரின் போது கால்களை இழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தை இலங்கை இராணுவம் நேற்று (05) அறிமுகப்படுத்தியது.
இதற்கமைய நேற்றையதினம் முன்னாள் போராளிகள் 32 பேருக்கும், இன்றையதினம் மேலும் 32 பேருக்கும் குறித்த செயற்கை கால்கள் வழங்கப்பட்வுள்ளது.
குறித்த நபர்களில் முன்னாள் பெண் போராளி ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
யுத்தத்தால் பலர் முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை இழந்துள்ள நிலையில், மேலும் சிலர் முழுமையாக தமது கால்களை இழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி சிங்கள இணையம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
போர்க்களத்தில் அவர்கள் எங்களுக்கு எதிராகப் போராடிய போதிலும் - அவர்கள் இனி எங்கள் எதிரிகள் அல்ல.
அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம் குறித்து கேள்விகளை எழுப்புவோர் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தங்கள் கண்களால் பார்க்க முடியும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.