ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை :
20 Mar,2021
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் ஜெனீவாவில் 2021 மார்ச் 22ஆந் திகதி வாக்களிப்பொன்றை நடாத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வெளிநாட்டு அமைச்சில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், எமது நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவது அல்லது வாக்களிப்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பான செயற்பாடு அல்ல என சுட்டிக்காட்டினார்.
“மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து நாங்கள் கவனமாக இருந்தோம். எமது அரசாங்கத்தின் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகையில், எமக்கு எதிராக பல்வேறு வழிகளில் குற்றங்களை சுமத்தி, ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் அதனை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பது நியாயமில்லை” என அமைச்சர் குறிப்பிட்டார்.
“எங்கள் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்களை தோற்கடிப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். பல நட்பு நாடுகள் இதற்காக எங்களுடன் கைகோர்த்து வருகின்றன. இந்தத் தடவை இந்தியாவும் எங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றோம்” என அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.