ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்!
28 Feb,2021
பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
COVID-19 அவசர மற்றும் நெருக்கடி நிலைமை என்ற செயற்றிட்டத்தின் கீழ் குறித்த நிதியை கடனான வழங்குவதற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீஜிங்கில் AIIB துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, இலங்கையின் தூதுவர் பாலித கோஹனாவுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட லைட் ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு நிதியளிக்கவும் வங்கி தயாராக இருப்பதாகவும் தூதுவருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பாண்டியன் மேலும் கூறியுள்ளதாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற திட்டங்கள் தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டால், திட்ட செலவில் 35 சதவீதம் (AIIB ஆல்) ஈடுசெய்யப்படும். அதேநேரத்தில் இந்த திட்டத்தை ஒரு அரசு நிறுவனம் மேற்கொண்டால் குறித்த திட்டத்திற்கு AIIB, 80 சதவீதம் நிதியுதவி வழங்கும்.
இலங்கையின் லைட் ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு நிதியளிப்பதில் வங்கி மகிழ்ச்சியடைகிறது, இது நிதி பற்றாக்குறையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது
மேலும் AIIB இன் ஊழியர்களில் இலங்கையர்கள் இல்லாததை தூதுவர் கோஹோனா குறிப்பிட்டார். ஆகவே குறித்த வங்கியில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க இலங்கையர்களை ஊக்குவிக்குமாறு நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.