பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.
25 Feb,2021
.
பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருடன் பாக்., அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் உடன் சென்றிருந்தனர். இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை நேரில் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்ததோடு, பாதுகாப்புத் துறை உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு, பாதுகாப்பு ஒத்துழைப்பிற்காக, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, பயங்கரவாதம், குற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறை பகிர்வு தொடர்பான விஷயங்களை கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும்,
ஒருங்கிணைப்பதற்கும் வலுவான கூட்டு தேவை என்பதை இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அடிக்கடி கூட்டங்களை நடத்துவதற்கும், உயர் மட்ட மற்றும் பிரதிநிதிகள் மட்ட பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் இரு நாடுகள் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுமட்டுமின்றி, இலங்கையில் விளையாட்டு மேம்பாட்டிற்காக 52 மில்லியன் வழங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான்-இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவத் துறையில் (எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 100 உதவித்தொகைகளையும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது