ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றி கொள்ளத் தயார்- பிரதமர்
17 Feb,2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றி கொள்ள தயாராகவே உள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் அரசியல் காரணிகளினால் இடைநிறுத்தப்பட்டன.
யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் குற்றவாளியாக்கியது. எனினும் இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க தயாராகவே உள்ளோம்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து எதிர் தரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் அன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தடையாக இருந்தவர்கள் இன்று கொவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தவும் தடையாக இருக்கின்றார்கள்.
உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 தாக்கத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றாலம் என எதிர் தரப்பினர் முயற்சிப்பது தவறாகும்.
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நாட்டு மக்களே எம்மை மீண்டும் அரசியலுக்கு அழைத்தார்கள். யாருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அரசியல் சூழ்ச்சிகள் இறுதியில் தோல்விதான் அடையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.