மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
08 Feb,2021
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாத் துறையின் மீட்புத் திட்டத்தின் பேரில் கசகஸ்தானின் அஸ்தானா விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 160 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வந்ததன் பிரதிபலனாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் சுற்றுலாத்துறை முகவர் நிறுவனமான எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தினர் இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை கசகஸ்தானிலிருந்து 350 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கசகஸ்தானின் தேசிய விமான சேவையான அஸ்தானா விமான சேவைக்கு மேலதிகமாக ஸ்கெட் விமான சேவையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.