விடுதலைப் புலிகளை இலங்கை வெல்ல இந்தியா உடனான உறவே காரணம்' - கோட்டாபயவின் ஆலோசகர் லலித் வீரதுங்
30 Jan,2021
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை நிலப்பரப்பில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை செலுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றி கொள்வதற்கு, அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளராக இருந்த தான் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தியாவுடன் நெருங்கி செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு தரப்பினரும் ஒரே விதமான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாக அவர் பேசினார்.யாராலும் வெற்றிகொள்ள முடியாது என அனைவரும் தெரிவித்த போரை, இந்தியாவின் உதவியுடன் தாங்கள் வெற்றி கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது கண்களுக்கு தெரியாத போரொன்றை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த கண்ணுக்கு தெரியாத போரிலும் இந்தியா தனது உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை இலங்கையர்கள் கொண்டாட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
இந்தியாவினால் இலங்கைக்கு ஐந்து லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் கடந்த 28ம் தேதி நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் ( ஜனவரி 29) அலுவல்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக சீனாவினால் அடுத்த மாதம் மூன்று லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இலங்கையில் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதியான அனைவருக்கும், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகளை வழங்க முடியும் என கோவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவிக்கின்றார்.