கட்டுநாயக்க விமான நிலையத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துடன் புதிய சட்டம்!
17 Jan,2021
கட்டுநாயக்க பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் நேற்று சனிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் பயணப் பொதிகள் எனத் தெரிவித்து பயணிகளால் இரகசியமான முறையில் கொண்டு செல்லப்படக் கூடிய வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை இனங்காண்பதற்காக இந்த மோப்ப நாய்களுக்கு அஸ்கிரியவிலுள்ள இலங்கை பொலிஸ் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த நாய்கள் ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையினால் உண்மையான மாதிரிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட நடைமுறை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறான நடைமுறைச் சோதனை இலங்கையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இதேவேளை இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதை இலக்காகக் கொண்டு விமானப்படையின் மோப்ப நாய்கள் படையணியை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான சேவை குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய விஷேட மோப்ப நாய்கள் 20 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இதற்காக 22 மில்லியன் ரூபா நிதியை இலங்கை விமான சேவை அதிகாரசபை வழங்கியுள்ளது.மேலும் சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அமுல்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
எனினும் அந்த விதிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இவ்வாறு மோப்ப நாய்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.