கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.12 கோடியை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.74 கோடியை தாண்டியுள்ளது. 17.75 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
ஆனால், இலங்கை வாழ் மக்கள் மத்தியில் கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல், அசட்டையினமாக செயற்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது, ஆனால் இலங்கையில் ஒவ்வொருநாளும் புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர், பலர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் நேற்றைய (28) தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 530 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்
இதேவேளை 520 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
நேற்றைய தினம் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக பேலியகொடை, திவுலப்பிட்டிய ,சிறைச்சாலை கொத்தணியைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை எட்டாயிரத்து 172. குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 221 கொரோனா. தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 614 .
இதே வேளை ,இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் மூவர் மரணமடைந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று இரவு உறுதி செய்தார்
இதற்கமைவாக கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று நோயாளர்களின் மூவரின் மரணம் தொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் (03) மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் , இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 194 ஆகும்.
தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 24 உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை, மற்றும் அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்;திய சாலையில் 2020 டிசம்பர் 28 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 22 ஆம் திகதி மரண மடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை, என அறிவிக்கப்பட்டுள்ளது.