மட்டக்களப்பில் ,வடக்கில் ,கொரோனா தொற்றினால் முதலாவது மரணம்!
26 Dec,2020
வவுனியாவைச் சேர்ந்த வயோதிபப் பெண் கொரோனா தொற்றினால் இன்று (சனிக்கிழமை) மரணித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
குறித்த பெண் கடந்த இரு தினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த பெண் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று நிமோனியா காச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது!
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் இன்று (சனிக்கிழமை) மாலை பதிவாகியுள்ளது.
காத்தான்குடியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரத்தம் மாற்றும் சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரின் இறப்பு இன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் உயிரிழப்பு ஐந்தாக அதிகரித்துள்ளது.