விமான நிலைய திறப்பு – இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு முதல் அனுமதி
20 Dec,2020
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளது.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், பயண முகவர்களுக்கும் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் கிருமி நீக்கம், சுங்க மற்றும் குடிவரவு நடவடிக்கைகள், சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் மற்றும் சுற்றுப்பயணத்திற்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாடு திரும்ப முடியாத இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்ப முடியும் என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி ஒரு நாளைக்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 3, 500 ஆக இருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.