20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்
25 Oct,2020
20ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதில் இன்னும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாம் சட்டத்துக்கு எப்போதும் மதிப்பளிப்பவர்கள். எமது காலத்தில் பல ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
இவை தொடர்பாக மக்களுக்குத் தெரியும். இதுதொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்க விரும்பவில்லை. நாம் அன்று பல செயற்பாடுகளை மக்களுக்காக செய்தோம். இதனைத் தான் குறியாகக் கொண்டு இயங்கினோம்.
எனவே, ஆணைக்குழுக்களை அவதானிக்கவும் அதனை விமர்சிக்கவும் எமக்கு காலம் இருக்கவில்லை. இன்று 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் இதற்கு எதிரானவர்கள் என்பதில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
எனினும், எமது அணியிலிருந்து சிலர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக நாம் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.
இதுதொடர்பாக சபாநாயகருக்கும் விரைவில் அறிவிக்கவுள்ளோம். இவ்வாறான ஏமாற்று வேலைகள், அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஒருவரது தனிப்பட்ட முடிவை நாம் விமர்சிக்க முடியாது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் தான், குறித்த நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இவ்வாறான செயற்பாடுகளால், நாம் என்றும் பின்னடைவை சந்திக்கப்போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.