17,19ஆவது திருத்தச்சட்டங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே கொண்டுவரப்பட்டன.
அதனால்தான் மீண்டும் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 18, 20ஆவது திருத்தச்சட்டங்களுக்கான தேவை எழுந்ததாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
17ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதே நோக்கமாக இருந்தது. பின்னர் மீண்டும் 19ஆவது திருத்தத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அதனால்தான் தற்போது 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மீண்டும் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
17ஆவது திருத்தம் இல்லாவிட்டால் 18இற்கான தேவை எழுந்திருக்காது. 19 இல்லாவிட்டால் 20இற்கான தேவை எழுந்திருக்காது. 19ஐ நீக்கவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.
சஜித்தை தோற்கடித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைத்ததும் அதற்குத்தான். அதேபோன்று ரணிலுக்கு ஒரு ஆசனம்கூட இல்லாது போனது.
கொழும்பில் போட்டியிட்டு முதலாவது விருப்ப வாக்கை பெற்று நான் தெரிவாகியிருந்தேன். 19ஐ முழுமையான எதிர்த்தமையின் காரணமாகதான் மக்கள் எனக்கு அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினர்.
1978இல் இருந்த அதிகாரத்தைவிட மேலதிகமான அதிகாரம் ஏதும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் கிடைக்காது. 19ஆவது திருத்தச்சட்டத்தால் நாடு அராஜமாக நிலைக்கே சென்றது.
நான்கு சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையென உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நான்கு சரத்துகளும் 19ஆவது திருத்தச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டவையாகும்.
அரசியலமைப்பில் இல்லாதொன்றை நீக்க முற்படும் போது உயர்நீதிமன்றம் ஏன் அதனை எதிர்த்துள்ளதென தெரியவில்லை.
19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம்தான் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவால் இயக்கப்பட்ட இரா.சம்பந்தன் போன்றோர் எதிர்க்கட்சித் தலைவராகவும் நிலை உருவானது.
சுயாதீன ஆணைக்குழு எனக் கூறப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவில் ரட்ணஜீவன் ஹூல் போன்றோர் செயற்பட்ட விதத்தை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், ஜனாதிபதியால் அவரை நீக்க முடியாதுள்ளது. ஆகவே, 20ஆவது திருத்தச்சட்டம் 69 இலட்சம் மக்களுக்கு மதிப்பளிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்றார்.