கண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுகளுக்கும் இன்று கட்டடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க தெரிவித்தார்.
கண்டியில் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம ஆகிய பகுதிகளில் இம்மாதம் 13ஆம் திகதியும் அதற்கு முன்னரும் பல தடவைகள் நில அதிர்வு உணரப்பட்டது.
இதேநேரம், இன்று காலை கண்டி – பூவெலிகட பகுதியில் வீடொன்றின் மீது 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, நில அதிர்வுகளுக்கும் இன்று கட்டடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று இடிந்து விழுந்த கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்திற்கும் சில அதிர்வுகள் உணரப்பட்ட பிரதேசத்திற்கும் பாரியளவு தூர இடைவெளி காணப்படுகிறது.
எனவே நில அதிர்விற்கும் கட்டட அனர்தத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தாழிறங்கியதன் காரணமாகவே கட்டடம் இடிந்து விழுந்தது. இதற்கான ஏனைய காரணிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துச மத்திய நிலையம் ஆராயும்” என தெரிவித்தார்.
வீட்டின் மீது இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டடம்- குழந்தையின் தாயும் தந்தையும் சடலமாகக் கண்டெடுப்பு
கண்டியில் வீடொன்றின் மீது 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தம்பதியினர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வீட்டின் மீது இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டடம் – குழந்தை உள்ளிட்ட மூவர் மீட்பு: இருவர் மாயம்
கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று வீட்டின் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில், குழந்தை உட்பட 5 பேர் மண்ணுக்குள்குள் சிக்குண்ட நிலையில், அவர்களில் இருவர் முதலில் மீட்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, படையினரின் முயற்சியில் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு தம்பதியை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த கட்டடம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நுவரெலியா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.