ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக தெரிவிக்கவில்லை- அரசாங்கம்
18 Sep,2020
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முப்பதின் கீழ் ஒன்று பிரேரணையில் இருந்து இலங்கை இணை அனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டது என அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகப்போவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்ததாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரால் இலங்கை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கூற்று மற்றும் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியால் அந்தக் கூற்றுக்கு அளிக்கப்பட்ட பதில் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் 2020, செப்டெம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேட்கப்பட்டது.
இதற்கு, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் தெரிவிக்கப்பட்ட பதில் அடங்கிய விடயங்களை தவறாக அர்த்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் அமைச்சரினால் அளிக்கப்பட்ட பதிலில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இருந்து இலங்கை வெளியேறுவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.
அத்தோடு, இலங்கையானது முப்பதின் கீழ் ஒன்று பிரேரணையில் இருந்து இணை அனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமே குறிப்பிடப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.