வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி
07 Aug,2020
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்ததாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 27 இலட்சத்து 71ஆயிரத்து 984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக மூன்று இலட்சத்து, 27ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் பிரதான கட்சியாக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வரலாற்று தோல்வியைச் சந்தித்துள்ளது.
அந்த கட்சி இம்முறை ஒரேயொரு ஆசனத்தை மட்டும் பெற்றுள்ளது. இக்கட்சி மொத்தமாக இரண்டு இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு ஆசனமும் போனஸ் ஆசனமாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் எந்த ஆசனத்தையும் பெறாமல் தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.
இதேநேரம் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேரதலில் ஐக்கிய தேசியக் கட்சி 50 இலட்சத்து 98 ஆயிரத்து 916 வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.