முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடு தொடர்கின்றது – விஜயகலா
21 Jul,2020
முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடு இடம்பெறுவதாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
பளை பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இருந்த நிலைமையை போன்று தற்போதும் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படும் நிலை இங்கே உருவாகியுள்ளது என்றும் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்களால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு முன்னாள் போராளிகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் இதனால் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாது முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் நிலையை காணப்படுவதகவும் தெரிவித்தார்