அநுராதபுர யுகத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் சபுமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது. என்பதற்காக வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களை உரிமை கோரமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ்- முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது.
செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம்.
பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின் நோக்கமல்ல ,பிற இனங்களின் மதம் தொடர்பான உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும். ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
வரலாற்று புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
என்பதற்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது.
போர்த்துக்கேயரது படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.
மேலும், கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது.
என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் நல்லூர் ஆலயத்துக்கு உரிமை கோரவில்லை.
இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மதவழிப்பாடுகள், மற்றும் கட்டிடக்கலை சிற்பங்கள் ஊடாக உறுதியாகுகின்றன.
ஒரு மதத்தின் உரிமைகள் செயலணியினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.