இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா?' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி
08 Jul,2020
கொழும்பு - காலி முகத்திடல் கடற்கரையோரத்தில் வைத்து ரஷ்ய நாட்டு இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த சில இளைஞர்கள் தொடர்பில் அதிகளவில் பேசப்படுகின்றது.
இந்தப் பெண் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா? ' என வினவியுள்ளமை தற்போது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது நண்பர்களுடன் பாதுகாப்பாக காலத்தை கடத்துவதற்கு வெளிநாட்டு யுவதிகளுக்கு இலங்கையில் சந்தர்ப்பம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த இந்த இளம்பெண் கொழும்பில் தற்போது வாழ்ந்து வருகின்றார்.
பாலியல் துன்புறுத்தல் முயற்சி: இளம் பெண்ணுக்கு என்ன நடந்தது?
குறித்த இளம்பெண் கடந்த 5ஆம் தேதி தனது மூன்று நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு மாலை வேளையில் சென்றுள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு முதலில் இடையூறு செய்து, துன்புறுத்தலுக்கு உட்படுத்தவும் முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் தனது உடலைத் தொட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடன் வருகை தந்த நண்பர்களை பார்த்து, மதுபோதையில் இருந்த இளைஞர், "இவளைப் பகிர்ந்துகொள்வோம்" என கூறியதாகவும், அதனை பொருட்படுத்தாது தனது நண்பர்களுடன் அந்த இடத்தை விட்டு செல்ல தாம் முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த இளைஞருடன் வருகைத் தந்த 10 பேர் வரையான இளைஞர்கள் தன்னை பின்தொடர ஆரம்பித்ததாக அவர் கூறுகின்றார்.
குறித்த இளைஞர்கள் தனது உடலைத் தொட்டதாக ரஷ்ய இளம்பெண் கூறியுள்ளார்.
இதன்போது தன்னை பாதுகாக்க முயற்சித்த தனது நண்பர்கள் மீது குறித்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தாக்குதல் நடத்திய போதிலும், தனது நண்பர்கள் குறித்த இளைஞர்களை அமைதிப்படுத்த முயற்சித்த நிலையில், அது வெற்றியளிக்கவில்லை என அவர் கவலையாக கூறியுள்ளார்.
அமைதிப்படுத்த முயற்சித்த தனது நண்பர் மீது மேலும் பலர் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், தான் தனது செல்பேசியில் சம்பவத்தை பதிவு செய்ய ஆரம்பித்ததை அவதானித்த குறித்த இளைஞர்கள், பின்னர் அமைதியடைய ஆரம்பித்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையில், அங்கிருந்த ஓர் இளைஞர் தனது கையின் மீது செல்பேசி கீழே விழும் வண்ணம் தாக்குதல் நடத்தியதுடன், தனது நண்பர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பொது இடமொன்றில் இவ்வாறான துன்புறுத்தல்கள் இடம்பெற்ற வேளையில், அதனை தடுத்து நிறுத்த எந்தவொரு நபரும் முன்வரவில்லை என ரஷ்ய இளம்பெண் தெரிவிக்கின்றார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படமொன்றை வெளியிட்ட குறித்த ரஷ்ய யுவதி, இந்த பிரச்சனையை முதலில் ஆரம்பித்தவர் அவர் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வருகைத் தருகின்ற போதிலும், குறித்த இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக கூறியுள்ள அவர், அதன் பின்னர் தாம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு உதவிகளை வழங்குமாறு ரஷ்ய யுவதி கேட்டுகொண்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து, கொழும்பு கோட்டை போலீசார் நடத்திய சுற்றி வளைப்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
செல்பேசியில் அவர்கள் செய்ததை பதிவு செய்யப்பட்டதை அவதானித்த சிலர், பின்னர் அமைதியடைந்ததாக அவர் கூறுகின்றார்.
சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதேவேளை,இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என ரஷ்ய யுவதி ஃபேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையையும் எதிர்பார்த்தே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், கடந்த சில வருடங்களாக பல்வேறு விதத்திலும் தொடர்ச்சியாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா முடக்கநிலை காரணமாக சுற்றுலாத் துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், வெளிநாட்டு யுவதியொருவர் இவ்வாறான கேள்விகளை எழுப்பியுள்ளமை இலங்கையின் நற்பெயருக்கும், சுற்றுலாத் துறை மீதான நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.