கருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது
04 Jul,2020
முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைதுசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த மனு, கடுவெல நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதி மனு மீதான விசாரணையை ஆரம்பிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், கடந்த யுத்த காலத்தில் ஆனையிறவில் களமுனையில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் படையினரை தான் கொன்றதாக கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், கருணாவை கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறு இருக்கையில், கருணாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.