கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித் தவித்த மேலும் 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
28 Jun,2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெலரஸ் (Belarus) நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கமைய இலங்கையில் இதுவரை 2,033 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 383 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், 42 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ள அதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.