கருணாவின் உரை உருவாக்கியுள்ள சர்ச்சை; வெளிவரும் உண்மைகளும் பொய்களும்
28 Jun,2020
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் அரசியலை நோக்கமாகக்கொண்டு நிகழ்த்திய உரை ஒன்று தென்னிலங்கை அரசியலில் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது.
கருணாவுடன் அரசியல் உறவை வைத்திருக்கும் அரசாங்கத்துக்கும் இது பெரும் சங்கடத்தைக் கொடுத்திருக்கின்றது.
சிங்களத் தேசியவாதக் கட்சிகளின் அழுத்தங்களால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரை விசாரணைக்கு அழைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால், ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் அரசியலை இலக்காகக்கொண்டே கருணாவின் உரையைப் பயன்படுத்துகின்றன.
தன்னை “கொரோனாவை விட மோசமான ஒருவர்” என எதிரணியைச் சார்ந்த பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடி கொடுக்க முற்பட்டே புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கின்றார் கருணா.
“ஆம் நான் கொரோனாவைவிட மோசமானவன்தான். கொரோனாவினால் 9 பேர் மட்டும்தான் பலியானார்கள். ஆனால், நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2,000, 3,000 படையினரைக் கொன்றோம். அதனால், நான் கொரோனாவைவிட கொடியவன்தான்” என்ற வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
கருணாவைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக அவர் இருந்திருந்தாலும், தலைமையுடன் முரண்பட்டு அரசுடன் இணைந்து செயற்பட்டவர்.
அதனால், அவரைத் துரோகியாகப் பார்க்கும் நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள். கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு பிரதி அமைச்சராக அவர் இருந்திருந்திருக்கின்றார்.
இருந்தாலும் தேசியப் பட்டியல் மூலமாகத்தான் பாராளுமன்றத்துக்கு அவர் வந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதிலுள்ள “றிஸ்க்” அவருக்குத் தெரியும்.
மகிந்த ராஜபக்ஷவுக்கும் அது தெரிந்திருந்தமையால்தான் தேசியப் பட்டியல் மூலம் கருணாவை எம்.பி.யாக்கினார்.
ஆனால், இந்த முறை மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. அதற்காகத்தான் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கயிருக்கின்றார்.
சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளின் ஆதரவுடன் தேர்தலைச் சந்திக்கும் ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன, கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தம்முடன் இணைந்து பயணித்த கருணாவை தமது கட்சியின் சார்பில் களமிறக்க விரும்பவில்லை.
அதன்பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் சூட்சுமங்கள் புரிந்துகொள்ளக் கூடியவைதான்.
கருணா தனியாகக் களமிறங்கவேண்டிய நிலை அதனால் ஏற்பட்டது. தனியாகக் களமிறங்கும் கருணாவுக்கு தமிழ் வாக்குகளைக் கவரவேண்டுமானால், இது போன்ற தமது வீரப் பிரதாபங்களை எடுத்துவிட வேண்டிய தேவை இருந்திருக்கும்.
ராஜபக்ஷக்களின் அணியில் இல்லாமல் தனியாகக் களமிறங்கியிருப்பதால், இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரம் அவருக்கிருந்தது.
மறுபுறம் ராஜபக்ஷக்கள் தம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கலாம்.
ஆனால், அவரது உரை அதிகளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே தெரிகின்றது. ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதும், அதில் படையினர் பலர் கொல்லப்பட்டதும் வரலாறு.
அதனைத் தனக்கேற்றவகையில் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றார் கருணா. தேர்தல் பரப்புரைகளில் இதெல்லாம் சகஜம்தான்.
கருணாவுக்குக் கூட, விடுதலைப் புலிகளுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தியே தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.
ஆனால், கருணா போன்ற ஒருவர் இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால், கருணாவிடம் அதனைவிட பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை. இது இந்தளவுக்கு நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தும் என்பது அவர் எதிர்பார்க்காதததாக இருந்திருக்கலாம்.
நெருக்கடி பூதாகரமாகி எதிர்க்கட்சிகள் இதனைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தேர்தல் பரப்புரைக் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிங்கள தேசியவாத தளத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தைத் தாக்குவதற்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக எதிர்க்கட்சிகள் இதனைக் கையில் எடுத்துள்ளன.
குறிப்பாக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இது தமது பரப்புரைகளுக்குக் கிடைத்துள்ள சிறந்த விடயமாகக் கருதிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
பதிலடியாக அரச தரப்பு சஜித்தின் தந்தை பிரேமதாசவை கையில் எடுத்திருக்கின்றது. புலிகளுக்கு அவர் ஆயுதம் கொடுத்தார் என்ற பிரசாரத்தை அரச தரப்பு முன்னெடுத்திருக்கின்றார்கள்.
தன்னுடைய வாக்கு வங்கியை சற்று அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் கருணா கொடுத்த பதிலடி இப்போது தெற்கு அரசியலை சூறாவளியாக்கியுள்ளது.
இதில் யாராவது பொது நலனுடன் பேசுகின்றார்களா என்றால், யாரும் இல்லை. எதிர்த் தரப்பைப் பலவீனப்படுத்துவதும், தமது தரப்பை பலப்படுத்துவதும்தான் அவர்களுடைய உத்திகளாக உள்ளன.
இதன்போது சில உண்மைகள் வெளிவருகின்றன. பல பொய்கள் உண்மைகளைப் போல வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றால் மக்களுக்கு ஏதாவது நன்மையுள்ளதா என்றால், ஒன்றும் இல்லை!