நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம்; பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட படையினர்
21 Jun,2020
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனோ காரணமாக நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மட்டுமே ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அம்மனின் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு தரிசிக்க வந்திருந்த பலரும் ஆலய வெளி வீதியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வயது வேறுபாடின்றி பலரும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்தும் பொலிஸார் ஆலய வளாகத்தினுள் உள் நுழைய எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் ஆலய வளாகத்தினுள் பொலிஸாரும் கடற்படையினரும் காலணிகளுடன் கடமையில் இருந்தமை தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடுமையாக பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஆலய பரிபாலன சபை, இந்து அமைப்புக்கள் மற்றும் சர்வமத அமைப்புகள் கவனத்திற்கொண்டு எதிர்வரும் நாட்களில் ஆலய சூழலில் காலணிகளுடன் கடமையில் ஈடுபடாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர்.