சவேந்திர சில்வா மீது போர் குற்றம் சுமத்திய மருத்துவருக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்?
20 Jun,2020
போரின் இறுதிக் கட்டத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் துரைராஜா வரதராஜாவுக்கு அமெரிக்க அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சாலே ஆகியோர் போர் குற்றங்களை செய்ததாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் மருத்துவர் துரைராஜா வரதராஜா சத்தியக் கடிதம் வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே அவருக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது இராணுவத்தினர் குண்டு வீசியதாக கூறுமாறு விடுதலைப் புலிகள் தன்னிடம் கூறியதாக மருத்துவர் துரைராஜா கொழும்பில் அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
அரச மற்றும் இராணுவ அழுத்தங்கள் காரணமாக அவர் இவ்வாறு கூறியதாக பின்னர் குறிப்பிட்டிருந்தார். இராணுவத்தினரே வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் கூறியிருந்தார்.
இங்கிலாந்தில் உள்ள செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகத்தின் பணிப்பாளரான கெல்லம் மெக்ரே, மருத்துவர் துரைராஜாவை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.