கொழும்பில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் –
01 Jun,2020
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்துகொள்ளவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய, தொம்பே பிரதேசத்தில் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் தொம்பே பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடொன்றில் இவ்வாறு மதுபான தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், வாக்காளர் இடாப்பில் பதிவுகளை கொண்டிராத, தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு நன்மை பயக்கக்கூடிய விடயம் என்பதால் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.