தொலைக்காட்சி கல்வி அலைவரிசை.வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் :
20 Apr,2020
ஊரடங்கு தொடர்பான முழு விபரம் இதோ !
எதிர்வரும் வார இறுதி நாட்களான 25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும், முழு நேர ஊரடங்கு நிலைமை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களிலும், நாள்தோறும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்மாவட்டங்களில் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு 57 மணி நேரம் நீடித்து 27 ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் எனவும் , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் தற்போதும் தொடரும் ஊரடங்கு நிலைமையும் எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடரும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
அதன்படி, ஏற்கனவே மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நாளை 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்த தீர்மமானிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் 11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதுடன், புத்தளம் மாவட்டத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா தொற்று பரவலுக்கான தேசிய நடவடிக்கை மையம் நேற்று கொழும்பில் பதிவான தொற்றாளர்களை கவனத்தில் கொண்டு உடனடியாக இரவோடிரவாக கூடி விஷேட தீர்மானங்களை நிறைவேற்றியது.
இதனையடுத்து நாளை மறுதினம் 22 ஆம் திகதி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கை நீக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அந்த நான்கு மாவட்டங்களினதும் அனைத்து பகுதிகளுக்குமான ஊரடங்கு நிலை எதிர்வரும் திங்கள் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஏனைய 21 மாவட்டங்களில் (அலவத்துவல, வறக்காபொல, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகள் தவிர) ஊரடங்கு பகல் வேளையில் இந்நாட்களில் தளர்த்தப்பட்டுள்ளன.
அம்மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வெளியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏ ற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
புதிய தொலைக்காட்சி கல்வி அலைவரிசை இன்று முதல் ஆரம்பம்
இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘குருகெதர’ புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் பங்கேற்புடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் ஊடக பங்களிப்புடன் இன்று(20.04.2020) முதல் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு இணைந்துக் கொள்ள முடியும்.
இதன்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியும். நாளை (21.04.2020) முதல் பிற்பகல் 4 மணி முதல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
இதன் பிரகாரம் உயர்தர கலை பிரிவிற்காக தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவிற்காக பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும்.
அத்துடன் சாதாரண தர மாணவர்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும்.அனைத்து பாடங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும் இலங்கை பரிட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.