கொரோனா பரவலால் அதி அபாய வலயத்திலிருந்து மீண்டது ஸ்ரீலங்காவின் ஒரு பகுதி
13 Apr,2020
கொரோனா வைரஸ் பரவலால் அதி அபாய வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் அபாய வலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சுகாதார, பாதுகாப்புத் தரப்பினர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரும் அவரது குடும்பத்தாருமாக 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த இரு பொலிஸ் பிரிவுகள் அதி அபாய பகுதிகளாக பெயரிடப்பட்டன.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அதி அபாய பிரதேசங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், புத்தளம், கண்டி மற்றும் யாழ். மாவட்டங்களும் தொடர்ந்தும் நீடிக்கின்றன. அந்த பகுதிகளில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 45 தொற்றாளர்களும் களுத்துறையில் 32 தொற்றாளர்களும் கம்பஹாவில் 23 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனைவிட புத்தளத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றளர்கள் எண்ணிக்கை 34 ஆகும்.
இவ்வாறான நிலையில் அதிக தொற்றாளர்களைக் கொன்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்க நடமாடும் பரிசோதனைக் கூடமொன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை இந்த நடமாடும் பரிசோதனை கூடத்தை தயார் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.