இலங்கையில் கொரோனா அதிவுயர் அச்சுறுத்தல் கொண்ட பகுதியாக மேல் மாகாணம் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள்) அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒன்று திரண்ட போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் கண்காணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அவசர அறிக்கையிலேயே இந்த விடயத்தை அந்த பிரிவு அறிவித்துள்ளது.
இதனால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோரின் வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்குமாறு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன்படி, சதொச, கீல்ஸ், லாப், ஆபிகோ, புட்சிட்டி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த வர்த்தக நிறுவனங்களை இணைத்துக் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை உரிய முறையில் வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மூன்று மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை நீடிப்பு
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிக அபாயகரமான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள், கேஸ் (சமையல் எரிவாயு) உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எந்தவித தடையும் இன்றி நாளை (25) முதல் வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள், வேன்கள், முச்சக்கரவண்டிகள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளைப் பொதுமக்களுக்கு விடுத்து வருகின்றது.
வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன் கடந்த 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு மாகாணம், புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நேற்றைய தினம் அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டது.
அதன்பின்னர் மீண்டும் 2 மணி முதல் எதிர்வரும் 26ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டத்தைக் குறித்த பகுதிகளுக்கு அமல்படுத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றைய தினம் அறிவித்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் அபாயத்தை கொண்ட வடக்கு மாகாணம் மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று தற்காலிகமாக சில மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டது.
குறித்த பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுவதுடன், அதில் மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் பெருமளவானோர் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகாலை முதலே அங்காடிகளில் (சூப்பர் மார்கெட்) வரிசைகளில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
முக கவசங்களை அணிந்து, ஒருவருக்கு ஒருவர் இடைவெளிகளை விட்டு மிகவும் சுகாதாரமான முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதைக் காண முடிகின்றது.
மக்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறை பின்பற்றி பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
அதிக கல்வி அறிவு கொண்ட நாடொன்று இவ்வாறே நடந்துகொள்கின்றது எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் பைசல் இக்பால் தனது டிவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொருட்களைக் கொள்வனவு செய்யும் காணொளியொன்றை முன்னிலைப்படுத்தியே அவர் இந்த பதிவை நேற்று வெளியிட்டிருந்தார்.
எனினும், மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் பெருமளவில் ஒன்று கூடியமை தற்போது பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது.
இந்த நிலையிலேயே மேல் மாகாணம், கொரோனா அதிவுயர் அச்சுறுத்தல் கொண்ட மாகாணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை இலங்கையில் 100 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக மூவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளதென சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையிலும், 8 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும், ஏனைய ஏனைய சில மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் 229 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பெண்ணொருவரும், உள்நாட்டு ஆண்ணொருவருமே முழுமையாகக் குணமடைந்திருந்தனர்.
வானத்திலிருந்து கிருமி நாசி தெளிக்கப்படாது
ஹெலிகொப்டர் மூலம் வானிலிருந்து கிருமி நாசி தெளிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது.
அவ்வாறான நடவடிக்கையொன்றைத் தாம் முன்னெடுப்பதற்கான திட்டம் கிடையாது என இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.
இன்றிரவு 11.30 அளவில் கிருமி நாசி தெளிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பல பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, இலங்கை விமானப் படை குறித்த தகவலை நிராகரித்துள்ளது.