இலங்கையில் ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரித்த கொரோனா தொற்று
15 Mar,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மார்ச் 13 வரை ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த பெண் இந்த மாதம் 7ஆம் தேதி இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இலங்கையில் இதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் ஒருவரின் உறவினரே 17 வயதான இளம்பெண் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து வருகைத்தந்த நிலையில், பொலன்னறுவை - கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட ஒருவரே 8ஆவதாக கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தற்போது பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 9 இலங்கையர்களும், 1 சீன பிரஜையும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு பிரஜை பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்துள்ளார்.
எனினும், பாதிக்கப்பட்ட 9 இலங்கையர்களும் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்