மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது – சஜித் பிரேமதாச!
25 Feb,2020
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது என்றும் அவ்வாறான நோக்கம் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் வரவு – செலவு திட்டத்தை இந்த அரசாங்கம் சமர்பித்திருக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் பலவீனமான நிதி முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் இன்று பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் வரவு – செலவு திட்டத்தை சமர்ப்பித்திருப்பார்கள். 500 பில்லியனுக்கும் அதிகமான தேசிய வருமானம் இழக்கப்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்து இன்றுவரையில் ஆளும் தரப்பினர் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளையும், நிரூபிக்கப்படாத விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் மாத்திரம் குறிப்பிட்டு வருகின்றார்கள்.
இன்று தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. முறையற்ற நிதி முகாமைத்துவமும், அரசாங்கத்தின் போட்டித்தன்மையுமே இதற்கு பிரதான காரணமாகும்.
2015 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தவுடன் அதே ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத பட்சத்திலும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அத்தோடு 100 நாள் செயற்திட்டம் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் நடைமுறை அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 100 நாட்களுக்கு அதிகமான நாட்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித அபிவிருத்திகளையும், மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கவில்லை.
மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க துரிதமாக வரவு செலவு திட்டத்தை கொண்டு வாருங்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றோம். என்று குறிப்பிட்டும் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை” என அவர் தெரிவித்தார்